பிரான்ஸில் கல்வித்துறையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, பள்ளிகளின் மோசமான உட்கட்டமைப்பு மற்றும் அதிக மாணவர் எண்ணிக்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று (06) நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. பல நகரங்களில் உயர்நிலைப் பள்ளிகள் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினரின் பேரணிகளும் இடம்பெற்று வருகின்றன.
பாரிஸ், லில், மார்செய், நாந்த், லியோன், ஸ்ட்ராஸ்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் மாணவர்கள் பள்ளிகளின் நுழைவாயில்களை குப்பைத்தொட்டிகள், சைக்கிள்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்பறைகளில் அதிக மாணவர்கள், பழுதடைந்த கட்டிடங்கள், போதிய குளிரூட்டும் வசதிகள் இல்லாமை மற்றும் மாணவர்களுக்கு அதிகமான கல்விச் சுமை உள்ளிட்டவை போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. சில பள்ளிகளில் கூரைகள் சேதமடைந்துள்ளமை, நீர்க்கசிவு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமை போன்ற பிரச்சினைகளும் மாணவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதனிடையே, போராட்டங்களின் சில பகுதிகளில் மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. கண்ணீர்ப்புகை மற்றும் கலவரக் கட்டுப்பாட்டு உபகரணங்களை பொலிஸார் பயன்படுத்தியுள்ள நிலையில், சில போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது பொருட்களை வீசியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை வடக்கு பிரான்ஸின் Lens பகுதியில் இடம்பெற்ற மோதலின்போது 15 வயது மாணவர் ஒருவர் கடுமையாக காயமடைந்து தனது கையை இழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நடவடிக்கை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சில மாணவர்கள் பொலிசாரின் நடவடிக்கைகளில் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நீதித்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, போராட்டங்கள் ஆரம்பித்ததிலிருந்து 5,060 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 87 சதவீதம் பேர் சிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,800-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, போராட்டங்களின் போது 700-க்கும் அதிகமான பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்துள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்களும் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தரப்புகள் தெரிவித்துள்ளன.
நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், பிரதமர் Sébastien Lecornu, மாணவர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளித்தல், பள்ளிக் கட்டிடங்களை சீரமைத்தல் மற்றும் பள்ளி நேரம் தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்து ஒக்டோபர் இறுதிக்குள் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
எனினும், மாணவர் போராட்டங்களில் பெரும்பாலானவை அமைதியாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், சில இடங்களில் ஏற்பட்ட வன்முறை மற்றும் பொலிஸாருடனான மோதல்கள் காரணமாக பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மனித உரிமை அமைப்புகள் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பிலும் கேள்விகளை எழுப்பியுள்ளன
