அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், ஹஜ் யாத்திரை ஏற்பாடுகள் தொடர்பான விடயங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான ஹினிதும சுனில் சேனவியை சந்திக்க உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ஹஜ் நிர்வாகம் தொடர்பான விடயங்களில் விரிவான கலந்துரையாடலை உறுதி செய்ய அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தச் சந்திப்பில் பங்கேற்க வேண்டும் என முன்மொழிந்துள்ளார்.
மேலும், முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் இணைத்துக்கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார். இதன் மூலம் ஹஜ் யாத்திரையை எதிர்பார்த்திருப்போரின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து நடைமுறைத் தீர்வுகளை கண்டறிய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் இந்த விடயங்களுக்கு தீர்வு காணும் நோக்கில், எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வு நாட்களில் இந்தக் கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் ரிஷாத் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.
