யாழ்ப்பாணம் – வலிகாமம் மேற்கு, சங்கானை பகுதியில் புதிதாக மதுபானசாலை அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து, பொதுமக்கள் இன்று (09) வெள்ளிக்கிழமை மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக நான்கு மதுபானசாலைகள் திறக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கும், நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கும் எதிராகப் போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

வலிகாமம் மேற்கு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் கலந்துகொண்டு, சங்கானை பகுதியில் புதிய மதுபானசாலையை அமைப்பதற்கான அனுமதியை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
புதிய மதுபானசாலைகள் அமைக்கப்படுவதால் சமூகத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, குடும்ப வன்முறைகள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதுடன், மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலமும் பாதிக்கப்படக்கூடும் என அவர்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும், உத்தேச மதுபானசாலை அமைக்கப்படவுள்ள இடத்திற்கு அருகில் பாடசாலை, பிரதேச செயலகம், சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இவ்வாறான சூழலில் மதுபானசாலை அமைக்கப்படுவது அப்பகுதியின் சமூகச் சூழலுக்கும் பொதுமக்களின் அன்றாட வாழ்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், வலிகாமம் மேற்கு பகுதியில் ஏற்கனவே மூன்று மதுபானசாலைகள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்ட போராட்டக்காரர்கள், மேலும் ஒரு மதுபானசாலையை அமைப்பதற்கான அனுமதியை வழங்குவது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீளாய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

போராட்டத்தின் பின்னர், பொதுமக்கள் பேரணியாக வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம் வரை சென்று, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரைப் பிரதேச செயலரிடம் கையளித்தனர்.
இந்தப் போராட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச. ஜெயந்தன், பிரதேச சபை உறுப்பினர்கள், வட பிரதேச நல்லொழுக்க சமூகத்தினர், அப்பகுதி மக்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
