முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கண் வைத்திய நிபுணரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இன்று (09) மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கண்ணில் ஏற்பட்டுள்ள நோய் நிலைமையினால், நேற்று (08) புதன்கிழமை அவர் சிறைச்சாலை வைத்திய நிபுணரிடம் காண்பிக்கப்பட்டார்.
சிறைச்சாலை வைத்திய நிபுணர் வழங்கிய மருத்துவப் பரிந்துரைகளுக்கு அமைவாக, இன்று (09) வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், கண் வைத்திய நிபுணரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
‘சிரிலிய சவிய’ கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 10 மில்லியன் ரூபா நிதி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
