ஸ்பெயினில் மாட்ரிட் – பார்சிலோனா இடையே பயணித்த அதிவேக ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து, நூற்றுக்கணக்கான பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் குறித்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டன.
ஸ்பெயினின் சரகோசா மாகாணத்தில் உள்ள ரிக்லா (Ricla) பகுதியில், திங்கட்கிழமை (12) மாலை பயணித்துக்கொண்டிருந்த AVE அதிவேக ரயிலின் பின்புற இயந்திரப் பகுதியில் தீ ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவசரகால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், ரயிலில் பயணித்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ரயிலில் இருந்த 283 பயணிகள் வெளியேற்றப்பட்டதாக ரயில் சேவை நிறுவனமான Renfe தெரிவித்துள்ளது. எனினும், சுமார் 380 பயணிகள் வெளியேற்றப்பட்டதாக சரகோசா மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. சிலருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்தையடுத்து மாட்ரிட் – பார்சிலோனா இடையிலான அதிவேக ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால் பல ரயில்கள் இடைநிலையங்களில் நிறுத்தப்பட்டதுடன், ஏராளமான பயணிகளின் பயணத் திட்டங்களும் பாதிக்கப்பட்டன.
பின்னர், ரயில் போக்குவரத்து படிப்படியாக மீள ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்தும் தாமதங்கள் ஏற்பட்டன. தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
