களுத்துறை பகுதியில் கடந்த 09 ஆம் திகதி உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற குறித்த இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு களுத்துறை மற்றும் அகலவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள், இரட்டைக் கொலைக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருள், திருடப்பட்ட முச்சக்கர வண்டி இரண்டு மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
