உத்தேச பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் ஊடகச் சுதந்திரம், அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயகப் பொறுப்புக்கூறலைப் பாதிக்கக்கூடும் எனத் தெரிவித்து, சுதந்திர ஊடக இயக்கம் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், சட்டமூலத்தின் சில உறுப்புரைகள் பயங்கரவாதம் தொடர்பான வரையறைகளைத் தெளிவற்ற வகையில் கொண்டுள்ளதாகவும், இதனால் புலனாய்வு ஊடகவியலாளர்கள் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ஊடகத் தகவல் மூலங்களின் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்றும், முப்படையினருக்கு வழங்கப்படவுள்ள சோதனை மற்றும் கைது அதிகாரங்கள் ஊடகச் செயற்பாடுகளைப் பாதிக்கக்கூடும் என்றும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சமத்துவம், கருத்துச் சுதந்திரம் மற்றும் மக்களின் இறைமை ஆகியவற்றை மீறக்கூடும் எனவும் அவர்கள் வாதிட்டுள்ளனர்.
எனவே, சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதுடன், சர்வஜன வாக்கெடுப்பின் மூலமும் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
