விமானத்திற்குள் மர்மப் பொருள்? வெடிகுண்டு மிரட்டலால் அவசரமாகத் தரையிறக்கம்!
இஸ்ரேலில் இருந்து ஆஸ்திரியா நோக்கிப் பயணித்த பயணிகள் விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்கேரிய தலைநகர் சோபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல் அவிவ் நகரிலிருந்து வியன்னா நோக்கிப் புறப்பட்ட ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் ஏ320 விமானத்தில், 51 பயணிகளும் ஆறு விமானப் பணியாளர்களும் என மொத்தம் 57 பேர் பயணித்துள்ளனர்.

விமானம் ருமேனியா எல்லைக்கு அருகே பறந்துகொண்டிருந்தபோது, அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அடையாளம் தெரியாத நபரிடமிருந்து மிரட்டல் தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், விமானத்திற்குள் சந்தேகத்திற்குரிய பொருள் ஒன்று தென்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, விமானி உடனடியாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து, விமானம் பல்கேரிய வான்பரப்பிற்குள் நுழைந்தபோது, பல்கேரிய விமானப்படையின் போர் விமானம் ஒன்று பாதுகாப்பு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் பின்னர், சோபியா விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தரையிறங்கியதும் பயணிகளும் விமானப் பணியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் விமானத்தில் தீவிர சோதனைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், வெடிகுண்டு மிரட்டலின் உண்மைத்தன்மை, சந்தேகத்திற்குரிய பொருள் தொடர்பான விசாரணை முடிவுகள் மற்றும் வெடிபொருள் ஏதேனும் கண்டறியப்பட்டதா என்பது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
