ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தான் அணி 158 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
அபுதாபியில் நேற்று (19) நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றது. அணியின் சார்பில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய செதிகுல்லா அடல் 102 ஓட்டங்களைப் பெற்று சதமடித்தார். இப்ராஹிம் சத்ரான் 90 ஓட்டங்களையும் பெற்றார்.
பந்துவீச்சில் ஜிம்பாப்வே அணியின் பிராட் எவான்ஸ் மற்றும் எர்னெஸ்ட் மசுகு ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
295 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களின் நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் 38.4 ஓவர்களில் 136 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
ஜிம்பாப்வே அணியின் சார்பில் அணித்தலைவர் சிக்கந்தர் ராசா 48 ஓட்டங்களையும், ரியான் பர்ல் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார். பசல்ஹக் ஃபரூக்கி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 158 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
