கடற்கரையில் பெற்றோர் சமூக வலைத்தளத்திற்கான காணொளியைப் பதிவு செய்துகொண்டிருந்தபோது, கடல் அலைகளில் சிக்கிய சிறு குழந்தையைப் பாதசாரி ஒருவர் விரைந்து சென்று மீட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தச் சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிலையில், குறித்த காணொளி ஒக்டோபர் 19ஆம் திகதி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணொளியில், தம்பதியினர் கடற்கரையில் தங்களைப் படம்பிடித்துக்கொண்டிருக்கும்போது, அவர்களது சிறு குழந்தை கடல் அலைகளுக்கு அருகில் செல்வதைக் காணமுடிகிறது. இதன்போது, குழந்தை அலைகளால் தள்ளப்பட்டு ஆபத்தான நிலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனை அவதானித்த அங்கிருந்த நபர் ஒருவர் உடனடியாகச் சென்று குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டதுடன், பெற்றோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, குழந்தையின் பாதுகாப்பைவிட காணொளி பதிவு செய்வதற்கு முக்கியத்துவம் அளித்ததாகக் கூறப்படும் பெற்றோரின் செயற்பாடு குறித்து பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
கடற்கரையில் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும், சமூக வலைத்தளங்களுக்கான காணொளிகளைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தும்போது ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
