ஆறு மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் குறிப்பிட்ட வகை சர்க்கரைகளைச் சேர்ப்பதைத் தடை செய்வதற்கான புதிய முன்மொழிவை இந்தியா முன்வைத்துள்ளது.
குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதுடன், ஆரம்பக் குழந்தைப் பருவத்தில் அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களில் சுக்ரோஸ் (Sucrose) மற்றும் பிரக்டோஸ் (Fructose) ஆகிய சர்க்கரை வகைகளைச் சேர்ப்பதைத் தடை செய்வதற்கான வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 16ஆம் திகதி இந்திய அரசிதழில் வெளியிடப்பட்ட இந்த முன்மொழிவு, குழந்தைகளின் வளர்ச்சிக்கான மிக முக்கியமான ஆரம்பக் காலத்தில் தேவையற்ற சேர்க்கைச் சர்க்கரைகளை உட்கொள்வதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போதுள்ள விதிமுறைகளின்படி, கார்போஹைட்ரேட் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக குறிப்பிட்ட வரம்புகளுக்குள் சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் ஆகியவற்றைச் சேர்க்க உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், புதிய திருத்தம் நடைமுறைக்கு வந்தால், ஆறு மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் இந்தச் சர்க்கரை வகைகளைச் சேர்ப்பது முற்றாகத் தடை செய்யப்படும்.
ஆரம்ப வயதில் அதிகப்படியான அல்லது தேவையற்ற சர்க்கரை உட்கொள்ளல், குழந்தைப் பருவ உடல் பருமன் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் உரிய ஊட்டச்சத்து தரநிலைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதும் இந்த முன்மொழிவின் நோக்கங்களில் ஒன்றாகும்.
மேலும், குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பாலை மட்டுமே வழங்குவதை ஊக்குவிக்கும் பொது சுகாதாரப் பரிந்துரைகளுக்கும் இந்த நடவடிக்கை ஆதரவளிப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வரைவு விதிமுறைகள் தொடர்பாகப் பொதுமக்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினர் தங்களது ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தடை இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை. வரைவு விதிமுறைகள் மீதான ஆலோசனைகள் நிறைவடைந்து, இறுதி விதிமுறைகள் உறுதிப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்த பின்னரே இந்தத் தடை அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
