தைவானை அண்மித்துப் பயணித்த சம்பி (Champi) புயலால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 527 பேர் காயமடைந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒக்டோபர் 24ஆம் திகதி வெளியான தகவல்களின்படி, முன்னதாக மிகத் தீவிரமான புயலாக வகைப்படுத்தப்பட்ட சம்பி, தைவானில் பலத்த காற்றையும் கனமழையையும் ஏற்படுத்தியது. புயலின் தாக்கத்தால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன், பல பகுதிகளில் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டது.
தைவானின் தீயணைப்புத் திணைக்களத் தகவலின்படி, லியூகியூ தீவுக்கு அருகில் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். புயலின் உச்சக்கட்டத்தின்போது 167,000க்கும் அதிகமான வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது.
புயல் காரணமாக விமானப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் மொத்தமாகப் பெருமளவிலான விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டன. தைவானின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.
தற்போது புயல் வலுவிழந்துள்ள போதிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று தொடர்ந்து வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் வடக்கு நோக்கி நகர்ந்து சீனக் கரையோரத்தை அண்மிக்கக்கூடும் எனவும், பின்னர் தெற்கு ஜப்பான் பகுதியை நோக்கிச் செல்லும் சாத்தியம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
