காலி, ஹபரதுவ பகுதியில் புகையிரதக் கடவையில் பேருந்து ஒன்று புகையிரதத்துடன் மோதிய விபத்து, யாங்கல்மோதர ரயில் விபத்தைப் போன்ற பேரனர்த்தமாக மாறியிருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டதாகப் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கொட்டாவ பகுதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றைச் சேர்ந்த மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு ஏற்றிச் சென்ற பேருந்து, நேற்று (25) ஹபரதுவ – கொக்கல பகுதியில் மார்ட்டின் விக்ரமசிங்க நினைவு அருங்காட்சியகத்துக்கு அருகிலுள்ள புகையிரதக் கடவையில் புகையிரதத்துடன் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்தில் 41 மாணவர்கள், 6 பெற்றோர் மற்றும் 14 ஆசிரியர்கள் என மொத்தம் 63 பேர் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் 13 மாணவர்கள் காயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
புகையிரதக் கடவையில் சிவப்பு எச்சரிக்கை விளக்குகள் எரிந்ததுடன், எச்சரிக்கை மணியும் ஒலித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், சாரதி அவற்றைப் பொருட்படுத்தாமல் பேருந்தைத் தண்டவாளத்தில் செலுத்தியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புகையிரதம் வருவதைக் கண்ட மாணவர்கள் பேருந்தை முன்னோக்கிச் செலுத்த வேண்டாம் என எச்சரித்த போதிலும், சாரதி தொடர்ந்து வாகனத்தைச் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியின் செயற்பாடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த பேருந்து செல்லுபடியாகும் பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரமின்றி இயக்கப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், அதன் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளைப் போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
