பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பான பணச்சலவை விசாரணைகள் குறித்து இதுவரை சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கூறப்படும் 15 மில்லியன் ரூபாயைத் தனியார் நிறுவனமொன்றில் முதலீடு செய்ததன் மூலம் பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாகச் சந்தேகத்தின் பேரில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணைகள் 2016ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்பட்டு, சாட்சியக் கோவைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.
இந்த வழக்கு இன்று (29) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமக முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.
அதேவேளை, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேகநபர்களான சுஜானி போகொல்லாகம, நித்ய சமரநாயக்க மற்றும் சுதர்ஷன பண்டார ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
விசாரணைகள் நிறைவடைந்து கோவைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்ட போதிலும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை ஆலோசனைகள் கிடைக்கவில்லை என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் அறிவித்தது.
இதனையடுத்து, வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார். அன்றைய தினம் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
