நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, பொதுமக்கள் மத்தியில் பிரபலமடைகிறதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் அத்தியாவசியமான பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தில் நேற்று (01) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், பொருளாதாரத்திற்கு அவசியமான கொள்கைகளைப் பொதுமக்களின் எதிர்ப்பைக் கருத்திற்கொண்டு நடைமுறைப்படுத்தத் தவறினால், அது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிவித்தார்.
பெரும்பாலான மக்கள் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், நாட்டின் பொருளாதாரத் தேவைகளைக் கருத்திற்கொண்டு சில சந்தர்ப்பங்களில் வரி விகிதங்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய தீர்மானங்கள் மக்கள் போராட்டங்களையும் சமூக அமைதியின்மையையும் ஏற்படுத்தக்கூடும். எனவே, வரிகளை அதிகரிப்பது அல்லது குறைப்பது தொடர்பான தீர்மானங்களின் பொருளாதாரப் பின்னணியையும் அவற்றின் தாக்கங்களையும் பொதுமக்களுக்கு அரசாங்கம் தெளிவாக விளக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், வரி மாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சமூகப் பிரிவினர் இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேவேளை, பொருத்தமான காலப்பகுதியில் தேவையான வரித் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
சமீபத்திய ஆண்டுகளில் இலங்கை கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்த போதிலும், அத்தியாவசியமானதும் சில நேரங்களில் பொதுமக்களால் விரும்பப்படாததுமான கொள்கைத் தீர்மானங்களை உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்தியதன் மூலம் ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேண முடிந்துள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.
இந்தப் பொருளாதார ஸ்திரத்தன்மையைத் தொடர்ந்து பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
