துபாய் சார்ஜாவில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மேலும் 8 சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதயகுமார வுட்ளர் தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் நேற்று வியாழக்கிழமை (28) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொலிஸார் மற்றும் முப்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘முழு நாடும் ஒன்றாக’ எனும் தேசிய ரீதியிலான விசேட வேலைத்திட்டத்துக்கு அமைவாக, குற்றச்செயல்களில் ஈடுபட்டு சட்ட நடவடிக்கைகளைத் தவிர்த்து, வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 22 ஆம் திகதி டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட 21 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள் தற்போது விசேட விசாரணைப் பிரிவுகளின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், துபாய் மற்றும் சார்ஜாவில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த மேலும் 8 சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்துவர புதன்கிழமை 27 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர், புலனாய்வுப் பிரிவின் நேரடித் தலையீட்டுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கைதான சந்தேகநபர்களில் 3 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவினருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் எனவும், வெளிநாட்டிலிருந்து குற்றச்செயல்களை வழிநடத்தியவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. 2 பேர் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தக்காரர்களாவர். ஏனைய 3 பேரும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய குறித்த சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் கொக்கட்டிச்சோலை, மின்னேரியா, அம்பலாங்கொடை, கொழும்பு வடக்கு (2 பேர்), மில்லனிய, பெம்முல்ல மற்றும் வத்தளை ஆகிய விசேட பொலிஸ் பிரிவுகளின் கீழ் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட உள்ளதுடன், அதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் பூரணப்படுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு 2022 ஆம் ஆண்டு தொடக்கம், 2026 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சர்வதேச சிவப்பு அறிவித்தலுக்கு அமைய 32 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் இராஜதந்திர முறையில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 70 சந்தேகநபர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும் 89 பேருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர்களையும் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
