ஆபிரிக்க நாடான கொங்கோவில் தற்போது 250க்கும் மேற்பட்ட எபோலா நோயாளிகள் உயிரிழந்துள்ள நிலையில், எபோலா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, உலக அளவில் மூன்று புதிய தடுப்பூசிகளைத் தயாரிக்கும் பணிகள் அதிவேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது ஏற்பட்டுள்ள எபோலா அச்சுறுத்தலானது வரலாற்றிலேயே மிக மோசமான ஒன்றாக மாறக்கூடும் என சர்வதேச எய்ட்ஸ் தடுப்பூசி முன்முயற்சி அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், இந்த அவசர மருத்துவ நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொற்றுநோய்களுக்கான ஆயத்தப் பாடுகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி என்ற சர்வதேச அமைப்பின் நிதி உதவியுடன் மூன்று பிரதான நிறுவனங்கள் தனித்தனி தொழில்நுட்பங்களில் இந்தத் தடுப்பூசிகளை உருவாக்கி வருகின்றன.
அதன்படி, கொவிட் பெருந்தொற்றின் போது பயன்படுத்தப்பட்ட தங்களது சொந்த விசேட தடுப்பூசி தொழில்நுட்பத்தின் மூலம் புதிய எபோலா தடுப்பூசியை ஒக்ஸ்போர்ட் தயாரித்து வருகிறது. இந்தத் தடுப்பூசி இன்னும் 2 முதல் 3 மாதங்களுக்குள் மருத்துவப் பரிசோதனைக்குத் தயாராகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனமான மொடர்னா, கொவிட் காலத்தில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட தங்களது ‘mRNA’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புந்திபுகியோ வைரஸை வீழ்த்தும் தடுப்பூசியை உருவாக்கி வருகிறது.
எபோலாவின் பொதுவான வகையான ‘சயார்’ (Zaire) வைரஸுக்கு ஏற்கனவே இருக்கும் தடுப்பூசியை, புதிய ‘புந்திபுகியோ’ வகைக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் பணியில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. குரங்குகளில் நடத்தப்பட்ட சோதனையில் இது 100% பாதுகாப்பை வழங்கியுள்ள போதிலும், மனிதர்களுக்கான பரிசோதனைக்குத் தயாராக இன்னும் 7 முதல் 9 மாதங்கள் எடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது கொங்கோவில் எபோலா தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை 1,000 ஐக் கடந்துள்ளதுடன், அண்டை நாடான உகாண்டாவிலும் 9 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
