இந்திய வரலாற்றில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களில் அதிக காலம் தொடர்ந்து பதவி வகித்த தலைவராக சாதனை படைத்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையும் இந்தியாவும் கொண்டுள்ள நெருக்கமான உறவை பாராட்டிய ஜனாதிபதி, இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராக பதவியேற்ற மோடி, தொடர்ந்து 4,399 நாட்கள் பதவியில் இருந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 4,398 நாள் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
பல்வேறு மொழிகள், மதங்கள் மற்றும் கலாசாரங்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், தொடர்ந்து மூன்று தேர்தல்களில் மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சியை வழிநடத்தி வரும் மோடியின் இந்த சாதனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அவரது ஆட்சிக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மக்கள் நலத் திட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
