மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து, அவரது தந்தை நஞ்சருந்தி உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸ் தகவல்களின்படி, 12 வயதுடைய சிறுமி ஒருவரும், அவருடன் இருந்த 10 வயதுடைய மற்றொரு சிறுமியும் தொடர்புடைய சம்பவம் குறித்து முறைப்பாடு கிடைத்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறுமியின் தாயார் நேற்று (17) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 54 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இரு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, குறித்த 12 வயது சிறுமியின் தந்தை, மகளுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி நஞ்சருந்திய நிலையில் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் இன்று (18) மீட்கப்பட்டதுடன், மரணத்திற்கான காரணம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
