இந்திய கிரிக்கெட்டில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரர்கள் தங்களது திறமையால் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகின்றனர். 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி உருவாக்கிய அதிர்வலையின் பின்னணியில், தற்போது அதே மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு 15 வயது வீராங்கனை அக்ஷரா குப்தா தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளார்.
BCA மகளிர் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்ற அவர், அபாரமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாகல்பூரில் உள்ள சாண்டிஸ் காம்பவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், 126 பந்துகளை எதிர்கொண்ட அக்ஷரா குப்தா ஆட்டமிழக்காமல் 306 ஓட்டங்கள் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.
அவரது இன்னிங்ஸில் 55 நான்குகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கியிருந்ததுடன், 242.86 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார். வெறும் 16 பந்துகளில் அரைசதமும், 34 பந்துகளில் சதமும் எட்டியது அவரது அதிரடி திறனை வெளிப்படுத்துகிறது.
கிழக்கு சம்பாரன் மாவட்டத்தின் ரக்ஸால் பகுதியைச் சேர்ந்த அக்ஷரா குப்தா, தற்போது பீஹார் 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மேலும், இரண்டு ஆண்டுகளுக்குள் BCCI நடத்திய நான்கு மகளிர் தொடர்களில் பங்கேற்ற பீஹாரின் முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்த சாதனை குறித்து பீஹார் கிரிக்கெட் சங்க அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். சமீபத்தில் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்குத் தேர்வானதைத் தொடர்ந்து, தற்போது அக்ஷரா குப்தாவின் இந்த முச்சதம் இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால திறமையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
