கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணையில் மீள்புனரமைக்கப்பட்ட கலை மற்றும் கலாசார மேம்பாட்டு மையம் நேற்று (19.06.2026) மாலை கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 11 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட இந்த மையம், கிழக்கு மாகாண ஆளுநரின் வேண்டுகோளின் பேரில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதனால் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா கௌரவ விருந்தினராகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஆர்.ஜே. அதிசயராஜ் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றனர்.
மேலும், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன், பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பூ. கஜேந்திரன், சிரேஷ்ட எழுத்தாளர் உமா வரதராஜன் மற்றும் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் தௌபிக் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது, கலாசார மையத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பொறுப்பு, பெரியநீலாவணை தமிழர் கலாசார ஒன்றியத்தின் செயலாளரும் ஊடகவியலாளருமான என். சௌவியதாசன் தலைமையிலான குழுவினரிடம் ஆளுநரால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.
நிகழ்வை முன்னிட்டு தமிழ் மற்றும் சிங்கள கலாசாரங்களை பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின. அத்துடன், பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மாணவர்களின் இசைக்குழு வாத்திய நிகழ்ச்சியுடன் வருகை தந்த அதிதிகள் சிறப்பாக வரவேற்கப்பட்டனர்.
