கேகாலை மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் அறநெறிப் பாடசாலை பொறுப்பாசிரியர்களுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடல், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் கடந்த ஜூன் 17 ஆம் திகதி நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் கே.ஜி.எஸ். நிஷாந், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை. அனிருத்தனன், ஆன்மீக தலைவர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலின் போது மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் காணி, நிதி மற்றும் நிர்வாகம் சார்ந்த சிக்கல்கள் குறித்து ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் தமது கருத்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். மேலும் ஆலயப் புனரமைப்பு, அடிப்படை வசதிகள் மேம்பாடு, திருவிழா காலங்களில் பக்தர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பு தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
அதேவேளை, அறநெறிப் பாடசாலைகளின் தற்போதைய நிலை, ஆசிரியர் பற்றாக்குறை, பாடத்திட்ட மேம்பாடு மற்றும் கற்றல் உபகரண வசதிகள் தொடர்பிலும் பொறுப்பாசிரியர்கள் தமது தேவைகளை எடுத்துரைத்தனர்.
இதன்போது உரையாற்றிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், ஆலயங்கள் வழிபாட்டு மையங்களாக மட்டுமன்றி கலாசார அடையாளத்தையும் சமூக ஒற்றுமையையும் பேணும் முக்கிய நிலையங்களாக உள்ளதாகக் குறிப்பிட்டார். ஆலயங்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதோடு, அறநெறிக் கல்வியை வலுப்படுத்தி பண்பாட்டு மரபுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை. அனிருத்தனன், ஆலயப் பதிவு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான அரச உதவிகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
மேலும், கேகாலை மாவட்ட இந்து ஆலயங்களின் அபிவிருத்தி மற்றும் அறநெறிக் கல்வி மேம்பாட்டிற்காக இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் உறுதியளித்தார். அதனுடன், பெருந்தோட்டப் பகுதிகளில் அமைந்துள்ள ஆலயங்களின் புனர்நிர்மாணப் பணிகளுக்காக நிதி உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வை கேகாலை மாவட்ட ஐயப்ப குருசுவாமிகள் ஒன்றியம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
