சீனாவில் வாலிபர் ஒருவரின் வயிற்றில் 20 ஆண்டுகளாக இருந்த தெர்மாமீட்டரை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
சீனாவின் வென்சோ பகுதியைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவர், கடந்த சில நாட்களாகக் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த இளைஞருக்கு 12 வயதாக இருந்தபோது, தற்செயலாக ஒரு பாதரச தெர்மாமீட்டரை விழுங்கியுள்ளார். பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார்.
20 ஆண்டுகளாக எந்த அறிகுறியும் இல்லாமல் அவர் வயிற்றில் இருந்த அந்த தெர்மாமீட்டர், சமீபத்தில் அவரது குடல் சுவரை அழுத்தத் தொடங்கியுள்ளது. இது உள் இரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடிய அபாய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் சுமார் 20 நிமிடங்கள் போராடி சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் அந்த தெர்மாமீட்டரை அகற்றியுள்ளனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்த தெர்மாமீட்டர் எந்தவித சிதைவும் இன்றி அப்படியே இருந்துள்ளது.
ஒருவேளை அது உடைந்திருந்தால் பாதரச நச்சினால் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
