உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு ரஷ்யாவினால் ஏவப்பட்ட 23 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்றைக் கூட உக்ரைன் இராணுவத்தால் சுட்டு வீழ்த்த முடியவில்லை என உக்ரைனிய வான்படை தெரிவித்துள்ளது.
வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் கடுமையான பற்றாக்குறையே இதற்குக் காரணம் என உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளது.
![]()
இந்த தாக்குதலின் போது ரஷ்யா ஒட்டுமொத்தமாக 68 ஏவுகணைகளையும், 351 ட்ரோன்களையும் பயன்படுத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதில் பெரும்பாலான குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட போதிலும், பாலிஸ்டிக் ஏவுகணைகள் குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியுள்ளன.
இதனால் கிவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் பல தரைமட்டமாகியுள்ளன.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
துருக்கியின் அங்காராவில் இந்த வாரம் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில், யுக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவது குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் “தீர்க்கமான முடிவுகளை” எடுக்க வேண்டும் என ஸெலென்ஸ்கி அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, உக்ரைனும் ரஷ்யாவின் மூன்று முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நீண்டதூர ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
