மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான ரோஹித் சர்மா, அந்த அணிக்காக 6,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர், இந்த வரலாற்று மைல்கல்லை எட்டினார்.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்காக 6,000 ஓட்டங்களைக் கடந்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலிக்கு (RCB) அடுத்ததாக ரோஹித் சர்மா (6002 ஓட்டங்கள்)இணைந்துள்ளார்.
அத்துடன், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடத்தில் நீடிக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கிண்ணங்களை வென்று கொடுத்த தலைவராகவும் ரோஹித் சர்மா திகழ்கிறார்.
ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையும் இவருக்கே உரியது.
தற்போது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியில் ஒரு சாதாரண வீரராக விளையாடினாலும், ரோஹித் சர்மாவின் ஓட்ட வேட்டை ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
ரோஹித் சர்மா இதுவரை 276 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 7,183 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
2008 முதல் 2010 வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய ரோஹித் சர்மா 2011 ஆம் ஆண்டிலிருந்த தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய வருகிறார்.
இதேவேளை. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி, பில் சோல்ட் (78), ரஜத் படிதார் (53) மற்றும் விராட் கோலி (50) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களைக் குவித்தது.
241 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோஹித் சர்மா 19 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறியது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இறுதியில் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 71 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா 40 ஓட்டங்களையும் பெற்றுப் போராடிய போதிலும், மும்பை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
