யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இலங்கை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
2015-ஆம் ஆண்டு மாணவி வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் (Trial-at-Bar) வழங்கிய மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் உட்பட நான்கு பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையே இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.
18 வயதான பள்ளி மாணவி வித்யா, 2015 மே மாதம் படுகொலை செய்யப்பட்ட விதம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் மக்கள் போராட்டங்களையும் உருவாக்கியது. நீண்ட விசாரணைக்குப் பிறகு, மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்த இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
