களுத்துறை தெற்கு, வெட்டுவகடே பகுதியில் வியாழக்கிழமை (28) காலை காரில் வந்த இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 43 வயதுடைய வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தை அடுத்து தப்பியோடிய சந்தேகநபர்களை கைது செய்ய களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் 3 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கார் மற்றும் வேன் ஆகியவை சம்பவத்தன்றே பொலிஸாரால் வெவ்வேறு இடங்களில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
களுத்துறை தெற்கு, வெட்டுவகடே பள்ளிவாசல் வீதியில் வியாழக்கிழமை (28) காலை 8.59 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. களுத்துறை தெற்கு, மரிக்கார் வீதியைச் சேர்ந்த 43 வயதுடைய, கால்நடைகளை விநியோகிக்கும் வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஹஜ் பெருநாளை முன்னிட்டு பள்ளிவாசலுக்குச் சென்றுவிட்டு, அவர் மோட்டார் சைக்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காரில் வந்த சந்தேகநபர்கள், வர்த்தகரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து, காரின் உள்ளே இருந்தவாறே T-56 ரக துப்பாக்கியால் 4 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியிருந்தது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபர் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் பின்னர் கொலையாளிகள் தப்பிச் சென்ற கார், தெபுவன, நேபட தபால் நிலையத்துக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போலிஸார் முன்னெடுத்திருந்த விசாரணைகளின் போது குற்றச்செயலை மேற்கொள்வதுக்கு முன்னர் சந்தேகநபர்கள் வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும் மற்றுமொரு வெள்ளை நிற சிறிய வேன் ஒன்றும் களுத்துறை , மத்துகம வீதியின் தொடங்கொட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் வியாழக்கிழமை (28) பிற்பகல் வேளையில் கண்டுபிடிக்கப்பட்டது.
