காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக கற்பிட்டி வரையிலான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கடும் கடல் கொந்தளிப்பு நிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ மட்ட எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்று (12) வெளியிடப்பட்டுள்ள இந்த அவசர எச்சரிக்கை நாளை (13) முற்பகல் 10.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த கடற்பரப்புகள் இடைக்கிடையே மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படக்கூடும். எனவே, கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினர் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இப்பகுதிகளுக்குள் கடல்தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பரப்புகளும், கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளும் மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றின் தாக்கத்தால் கடும் கொந்தளிப்புடன் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதேவேளை, மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் அலை உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கும் சாத்தியமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினர் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
