இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரும், உலகின் தலைசிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவருமான பென் ஸ்டோக்ஸ், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன், தனது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நோட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்திற்கு முன்னதாக, இங்கிலாந்து அணி வீரர்களிடம் தனது ஓய்வு முடிவை ஸ்டோக்ஸ் பகிர்ந்து கொண்டார். அந்த தருணத்தில் உணர்ச்சிவசப்பட்ட அவர், இந்த அணிக்காகவும் சக வீரர்களுக்காகவும் பலமுறை போராடியதாகவும், இந்தப் போட்டியே தனது கடைசி சர்வதேசப் பயணமாக இருக்கும் என்றும் கூறினார்.
மேலும், எஞ்சியுள்ள இரண்டு நாட்களில் அணி தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதே தனது ஒரே விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
35 வயதான ஸ்டோக்ஸ், சமீபத்தில் லண்டனில் இடம்பெற்ற ஒரு சர்ச்சைக்குரிய சம்பவம் காரணமாக இங்கிலாந்தின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. அந்தச் சம்பவத்தில் அணியின் பாதுகாப்பு அதிகாரியும் தொடர்புடையதாகக் கூறப்பட்டதால், இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் ஆதரவு குறித்த கேள்விகளும் எழுந்திருந்தன.
பென் ஸ்டோக்ஸ், 2019 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 84 ஓட்டங்கள் குவித்து, இங்கிலாந்து முதல் முறையாக உலகக் கிண்ணத்தை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதேபோல், 2019 ஏஷஸ் தொடரில் ஆட்டமிழக்காமல் 135 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்தை வரலாற்று வெற்றிக்குக் கொண்டு சென்ற இன்னிங்ஸ் இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாகக் கருதப்படுகிறது.
தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 7,243 ஓட்டங்களையும் 251 விக்கெட்டுகளையும் பதிவு செய்துள்ள ஸ்டோக்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ஓட்டங்களும் 250 விக்கெட்டுகளும் கடந்த மிகச் சில சகலதுறை வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.
இந்நிலையில், பென் ஸ்டோக்ஸின் ஓய்வைத் தொடர்ந்து ஹாரி புரூக் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் அடுத்த தலைவராக நியமிக்கப்படலாம் என்றும், ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள தொடரிலிருந்து புதிய தலைவரின் கீழ் இங்கிலாந்து அணி களமிறங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
