நாடளாவிய ரீதியில் ஜூன் மாதத்தில் மாத்திரம் 19,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இன்று திங்கட்கிழமை (29) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று வரை நாடளாவிய ரீதியில் 53,159 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த வருடத்தின் 25ஆவது வாரம் நிறைவடையும் போது, நாட்டின் 124 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களிலும் மாதமொன்றுக்கு பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 10,000 க்கும் குறைவாகவே காணப்பட்டது. எனினும், இந்த ஜூன் மாதத்தின் கடந்த 28 நாட்களில் மாத்திரம் 19,318 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மாகாண ரீதியில் அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். அங்கு 27,833 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இது மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் 52.36 சதவீதமாகும்.
நிலவும் அபாயகரமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த, நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதற்கும், வீடுகளையும் சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கமைய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக நாடு தழுவிய ரீதியில் விசேட சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கல்கிஸ்சை தலைமையக பொலிஸ் நிலையத்தின் சுமார் 100 பொலிஸ் அதிகாரிகளின் பங்களிப்புடன் நேற்று விசேட சிரமதானப் பணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
கல்கிஸ்சை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் சுமேத விமலகுணரத்னவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்நடவடிக்கை பாரியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
