மன்னார் மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடு திருத்தலப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (01) இரவு 7.30 மணியளவில் மடு ரோட் சந்தி – பள்ளமடு சந்தி வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த அந்தோனி ஜெரோம் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆவணித் திருவிழாவில் பங்கேற்பதற்காக மடு திருத்தலத்திற்கு வந்திருந்தபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற அவர், வீதித் தடையைக் கடக்க முற்பட்டபோது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
