சாய்ந்தமருது மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் அடைமழை காரணமாக பல பிரதான மற்றும் உட்புற வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நேற்று (2) மாலை பெய்த கடும் மழையின்போது, மழைநீர் வடிகான்கள் ஊடாக முறையாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாக வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகன சாரதிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முறைசாரா வடிகான் அமைப்புகள் மற்றும் அடைபட்டுள்ள நீர்வழிகளை உடனடியாக சீரமைத்து, தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்றுவதற்கு பிரதேச சபை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
