மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளதால் அந்த வீதியூடான போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியில் மண்மேடுகளும் பாறைகளும் சரிந்து விழுந்துள்ளமையால் அட்டனில் இருந்து கினிகத்தேன, நாவலப்பிட்டி, கண்டி மற்றும் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்களுக்கும், அதே திசைகளில் இருந்து அட்டன் நோக்கி வரும் வாகனங்களுக்கும் போக்குவரத்துத் தடைகள் ஏற்பட்டுள்ளன.
வீதியில் விழுந்துள்ள மண்மேடுகளை அகற்றி போக்குவரத்தைச் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையும் பிரதேசவாசிகளும் இணைந்து தற்போதைக்கு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இருப்பினும், நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பயணிகள் மற்றும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
