அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன நாளை செவ்வாய்க்கிழமை (22) பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவுள்ளார்.
உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதியரசர்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் பொருட்டு ஆக்கப்பட்ட அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தையும், மேல், மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் பொருட்டு ஆக்கப்பட்ட நீதித்துறை (திருத்தச்) சட்டமூலத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கடந்த ஒகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.
இவ்விரு சட்டமூலங்களையும் சவாலுக்குட்படுத்தி அரசியலமைப்பின் 121 ஆவது பிரிவின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் 65 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை பரிசீலனை செய்வதற்கு பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையில், நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ஜூன ஒபேசேகர, சம்பத் அபேகோன்,கிஹான் குலதுங்க ஆகியோரை உள்ளடக்கிய வகையில் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் ஒன்று நியமிக்கப்பட்டது.
இதற்கமைய குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் இரண்டு நாட்கள் இடம்பெற்ற நிலையில், சட்டமூலங்கள் தொடர்பான நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
22 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய சட்டமூலங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன நாளை சபைக்கு அறிவிக்கவுள்ளார்.
இவ்வாறான நிலையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருதம்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மீதான இருநாள் விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமையும் (24), வெள்ளிக்கிழமையும்(25) இடம்பெறவுள்ளது.அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்புடன் சட்டமூலங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியினர் இவ்விரு சட்டமூலங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிமை பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
