முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவருக்கு 50,000 ரூபாய் கையூட்டல் வழங்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது மனைவி உள்ளிட்ட மூவர், எதிர்வரும் 20ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சரண குணவர்தனவின் மனைவி சினாரி லக்மந்தி ஹெட்டியாராச்சி, நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவர் மற்றும் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்ற பதிவாளர் ஆகியோரே சந்தேகநபர்களாக உள்ளனர்.
இன்று (06) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தொலைபேசியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தகவல் பரிமாற்றங்கள், பணப் பரிமாற்றங்கள் மற்றும் குறியீட்டு முறையில் தகவல் பரிமாற்றம் தொடர்பான விசாரணை தகவல்களை கையூட்டல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் முன்வைத்தது.
சந்தேகநபர்களுக்கு பிணை கோரப்பட்ட போதிலும், அதற்கான காரணங்கள் விசேட காரணங்களாகக் கருத முடியாது எனத் தெரிவித்த நீதவான், மூவரையும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
