நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள மின்விநியோகத் தடையைத் தொடர்ந்து, அம்பத்தலை மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, வீடுகள் மற்றும் நிறுவனங்களில் தற்போது சேமித்து வைக்கப்பட்டுள்ள நீரை மிகுந்த கவனத்துடனும் சிக்கனமாகவும் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், மின்விநியோகத் தடையால் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்குத் தனது வருத்தத்தையும் சபை தெரிவித்துள்ளது.
சூரிய மின் தகட்டு அமைப்புகளைத் துண்டிக்கக் கோரிக்கை
இதற்கிடையில், மின்சாரக் கட்டமைப்பை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், மறு அறிவித்தல் வரை கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் தகட்டு அமைப்புகளைத் துண்டிக்குமாறு பொதுமக்களிடம் தேசிய மின்சாரக் கட்டமைப்பு செயற்பாட்டாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மின்விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை
அவசர மின்வெட்டு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் மின்விநியோகத்தை விரைவாக வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டமைப்பைச் சீரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
