அனுராதபுரம், நம்படகஸ்வேவ பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார்.
நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மழை காரணமாக வயல் பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த மூவர், பாதுகாப்பிற்காக அருகிலிருந்த மரமொன்றின் கீழ் தஞ்சமடைந்துள்ளனர்.
இதன்போது திடீரென மின்னல் தாக்கியதில் மூவரும் காயமடைந்த நிலையில், உடனடியாக ரம்பேவ பிரதேச மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில், 61 மற்றும் 26 வயதுடைய இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மரங்களின் கீழ் தஞ்சமடைவதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டடங்களுக்குள் செல்லுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
