ஊடகத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 99 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா நிதியைப் பயன்படுத்தி 600 குழாய்களைக் கொள்வனவு செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணை டிசம்பர் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இன்று (5) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மூன்று பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், அரசியல் நடவடிக்கைகளுக்காக 600 குழாய்களைக் கொள்வனவு செய்ய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிதி பயன்படுத்தப்பட்டதன் மூலம் அரசாங்கத்துக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
