59 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு உற்பத்தி சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதுடைய சீன வியாபாரியான அவர், இந்தியாவின் சென்னை ஊடாக இண்டிகோ விமான சேவையின் 6E-1175 விமானத்தில் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் “பசுமை வழிப்பாதை” (Green Channel) ஊடாக சுங்கப் பரிசோதனையைத் தவிர்த்து வெளியேற முயன்றபோது, அவரது இரண்டு பயணப் பைகளில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 39,400 சிகரெட்டுகள் அடங்கிய 197 சிகரெட் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேகநபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
