என்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள எதிர்க்கட்சியின் உறுப்பினர்களான சாமர சம்பத் தசநாயக்க, தயாசிறி ஜயசேகர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தாங்கள் இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் கோரவில்லை என்பதுடன், அவர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
காழ்ப்புணர்ச்சிகளில் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மீளப்பெற வேண்டும் என தாங்கள் வலியுறுத்த வேண்டும். அத்தகைய சந்தர்ப்பம் ஏற்படும் வரை தங்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு கூட்டங்களிலும் பங்கேற்க போவதில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், எதிர்க்கட்சித் சஜித் பிரேமதாசாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்,எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புமிக்க பதவியில் தங்களது தலைமையில் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களில் நான் கலந்துகொள்ளாமை தொடர்பான எனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் இக்கடிதத்தின் மீது தங்களின் அதீத கவனத்தைக் கோருகின்றேன்.
பாராளுமன்றத்தில் தங்களது ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும்,எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரும் என்மீது முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதுவரை எந்தவொரு கண்டனத்தையோ அல்லது கருத்தையோ தாங்கள் வெளியிடவில்லை.
புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ,கடந்த 2025.10.23 ஆம் திகதி அரசியலமைப்புச் சபையின் உறுப்பினரான சிவஞானம் சிறீதரன், தனக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் அதனை அரசியலமைப்புச் சபைக்குத் தெரிவிக்கத் தவறி, விசாரணையைத் தடுக்க முயன்றார் என்றும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் நியமனங்களில் பங்கேற்பதன் மூலம் ‘நலன்சார் முரண்பாட்டை’ ஏற்படுத்தி,பாராளுமன்ற சிறப்புரிமைகளையும் நடத்தை விதிகளையும் மீறினார் என்றும் பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
