பொலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா ரயில் நிலையத்தில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையிலிருந்து ஜெய்ப்பூர் நோக்கிப் பயணித்த புனே–ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தபோதே, இன்று (19) திங்கட்கிழமை காலை குறித்த மூவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ரிதிக் (Ritik) மற்றும் ரேஹான் (Rehan) என அடையாளம் காணப்பட்ட இருவரும் அடங்குகின்றனர். மூன்றாவது சந்தேகநபர் சிறுவன் எனத் தெரிவிக்கப்படுவதுடன், அவருடைய அடையாளம் தொடர்பான மேலதிக விபரங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
மும்பை பொலிஸாரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலப் பொலிஸார் மற்றும் ரயில்வே பொலிஸார் இணைந்து இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, சம்பவத்திற்குப் பின்னர் சந்தேகநபர்கள் டெல்லி வழியாக நேபாளத்திற்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இதுவரை ஆயுதங்கள் எவையும் மீட்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையின் ஜுஹு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடிகர் டைகர் ஷ்ராஃப் தொடர்புடைய வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தச் சம்பவத்தில் நடிகர் காயமின்றித் தப்பியதாகவும், அவருடைய சாரதி உள்ளிட்ட இருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக மும்பை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
