இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தெரிவு செய்யப்படும்போது, அவர்களின் இனத்தையோ பிரதேசப் பின்னணியையோ கருத்திற்கொள்வதில்லை என்றும், வீரர்களின் திறமை மற்றும் களச் செயற்பாடுகளின் அடிப்படையிலேயே தெரிவுகள் இடம்பெறுகின்றன என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய அணிக்கான வீரர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பு சுயாதீன கிரிக்கெட் தெரிவுக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர்களான மிலன் ரத்நாயக்க மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய போதிலும், அவர்களுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியில் மேல் மற்றும் தென் மாகாணங்களைச் சேர்ந்த வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாகவும், ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த திறமையான வீரர்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமெனவும் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், வீரர்களின் திறமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கருத்திற்கொண்டே தெரிவுக்குழு முடிவுகளை எடுப்பதாகத் தெரிவித்தார்.
அத்துடன், மிலன் ரத்நாயக்க மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகிய வீரர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களைத் தெரிவுக்குழுவின் கவனத்திற்குக் கொண்டுசென்று, அவர்களின் திறமைகளைப் பரிசீலிக்குமாறு கோர முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
