தாய்வானை நெருங்கியுள்ள ‘சம்பி’ (Champi) புயல் காரணமாக அந்நாட்டின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் கனமழை அச்சுறுத்தல் காரணமாகப் பாடசாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், விமானப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று (23) வெளியான தகவல்களின்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவைகள் உள்ளிட்ட மொத்தம் 977 விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 96 படகுச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
புயலின் தாக்கத்தால் கடலில் உயரமான அலைகள் எழுந்துள்ளதுடன், மணிக்கு சுமார் 191 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கடல் அலைகளைப் பார்ப்பதற்காகக் கடற்கரைகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தான மலைப்பகுதிகளில் வசித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். புயலுடன் தொடர்புடைய சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புயல் நேரடியாகத் தாய்வானை கடக்காமல் அதன் வடகிழக்குப் பகுதியை ஒட்டிச் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பலத்த காற்று மற்றும் கனமழையின் தாக்கம் தொடர்ந்து நீடிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
