ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஆட்சியில் இதுவரையான காலப்பகுதியில் 1854.77 மில்லியன் அமெரிக்க டொலரிற்கும் அதிகளவான வெளிநாட்டு அரசமுறை கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வினவிய தகவலுக்கு அமைய நிதியமைச்சு அரச கடன்முறை தொடர்பில் இவ்வாறு பதிலளித்துள்ளது.
இதற்கமைய 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற காலப்பகுதியில் இருந்து 2025.05.06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தை தவிர்த்து அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள வெளிநாட்டு அரச கடனின் பெறுமதி 1854.77 மில்லியன் டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
1752.46 மில்லியன் டொலர் பல்தரப்பு கடன்,102.31 மில்லியன் டொலர் இருதரப்பு கடன் என்ற அடிப்படையில் 1854.77 மில்லியன் டொலர் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஜப்பான்,சவுதி அரேபியா, இந்தியா, தென்கொரியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிடமிருந்து இருதரப்பு அரசமுறை கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
