நெல் விலை மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்க அரசாங்கம் தடை விதித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள், விவசாயம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் நெல் கொள்வனவு மற்றும் நாட்டின் அரிசித் தேவைகள் குறித்து கலந்துரையாட திட்டமிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் பார்வையாளராக கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட போதிலும், தனது கருத்துகளை முன்வைக்க அனுமதிக்க வேண்டாம் என அரசாங்கம் குழுத் தலைவருக்கு அறிவித்ததாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பும் எதிர்க்கட்சியை மௌனப்படுத்தும் முயற்சியாக இது அமைந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், நெல் உற்பத்திச் செலவு ஒரு கிலோவுக்கு 137 ரூபாய் என விவசாய அமைச்சர் தெரிவித்த நிலையில், அரசாங்கம் நாடு, சம்பா மற்றும் கீரி சம்பாவுக்கான உத்தரவாத விலைகளை முறையே 120, 130 மற்றும் 140 ரூபாயாக அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
