ஈரானின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் வடக்கு பிரதேசங்களில் ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பின்னர், முதல் முறையாக இவ்வாறு நேரடி பரஸ்பர தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த மோதல், வாரம் முழுவதும் தொடரக்கூடும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. லெபனானின் பெய்ரூட் நகரை குறிவைத்து நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கான பதிலாகவே ஈரான், இஸ்ரேலை தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, அவர்களின் தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் மேற்கொண்டதாக இஸ்ரேல் விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில், ஈரானுக்கு எதிராக மேலும் எந்தவொரு பதில் தாக்குதல்களையும் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
