நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பெய்து வரும் கனமழையால், நானுஓயா பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல வீதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று (18) மாலை பெய்த கடும் மழையால், நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியைக் கடந்து வெள்ளநீர் பாய்ந்துள்ளது. இதனால் நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் கார்லிபேக் சந்தியில் பெருமளவு வெள்ளநீர் தேங்கியதால், சுமார் இரண்டு மணித்தியாலங்கள் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டது.
தொடர்ந்து பெய்த மழையால் நானுஓயா கெல்ஸி மற்றும் மஹாஎலியா தோட்டப் பகுதிகளிலுள்ள பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இன்று (19) காலை கார்லிபேக் சந்தியில் வெள்ளநீர் ஓரளவு வடிந்துள்ள போதிலும், வீதியில் சேறு மற்றும் மண் குவிந்துள்ளதால் போக்குவரத்து சிரமங்கள் தொடர்கின்றன.
அதேவேளை, நானுஓயா டெஸ்போட் பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வெள்ளப்பெருக்கினால் சில ஆறுகள் மற்றும் சிறிய குளங்களின் கரைகளும் உடைப்பெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நானுஓயா நகர்ப்புறத்தில் தொடர்ச்சியாக ஏற்படும் வெள்ளப்பெருக்குக்கு, ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்வடிகால் பாதைகளை மறித்து முறையற்ற வகையில் கட்டடங்கள் அமைக்கப்படுவது முக்கிய காரணமாக இருக்கலாம் எனப் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முறையான நீர்வடிகால் வசதிகளை ஏற்படுத்தி, நீர்வழித்தடங்களில் உள்ள தடைகளை அகற்றுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
