ஒருவரால் தொடர்ச்சியாக அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு தொந்தரவு செய்யப்படுகிறீர்கள் அல்லது தொடர்ந்து குறுஞ் செய்திகள் அனுப்பப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறீர்கள் என்றால், அதற்கு எதிராக நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கமுடியும் என இலங்கை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகள் 1992 ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டத்தில், 2024 ஆம் ஆண்டின் 39ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் 32 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ளன.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
(1) எந்தவொரு தொலைத்தொடர்பு அதிகாரியையோ அல்லது எந்தவொரு நபரையோ தொந்தரவு செய்யும், மன உளைச்சலை ஏற்படுத்தும் அல்லது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், நியாயமான காரணம் இன்றி, (அ) தொலைபேசியை பயன்படுத்தி தொடர்ச்சியாக அழைப்புகளை மேற்கொள்வது அல்லது செய்திகளை அனுப்புவது அல்லது பரிமாற்றுவது, அல்லது (ஆ) பிற பயனர்களின் தொலைபேசி எண்களை வெளியிடுவது, அனுப்புவது அல்லது பரிமாற்றுவது, எந்த நபரானாலும் குற்றம் புரிந்தவராக கருதப்படுவார்.
குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேற்படாத குற்றப்பணமும், குற்றப்பணத்தைசெலுத்த தவறினால் 6 மாதத்திற்கு மேற்படாததுமான காலத்திற்கு சிறைத் தண்டனைக்கும் உட்படுவார்.”
மேலும் (2) உபப் பிரிவில் உள்ள சில சொற்கள் மாற்றப்பட்டு, தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தெரியவருவது, தொந்தரவு தரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகள் தொடர்பாக மேலே கூறப்பட்ட சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதாகும்.
மேலும், சிலர் மற்றவர்களின் தொலைபேசி எண்களை சமூக ஊடகங்கள் அல்லது பிற வழிகளில் அனுமதி இல்லாமல், தவறான தகவல்களுடன் வெளியிட்டு அவர்களை தொந்தரவு செய்வதும் காணப்படுகிறது. அதற்கும் மேற்கண்ட சட்ட விதிகள், குறிப்பாக 32 (1)(ஆ) உபபிரிவின் கீழ், சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் – எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
