அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரப் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்கள், நேற்று (07) இரவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், புலனாய்வு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து குறித்த உணவகத்தை திடீரென முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்டபோது, ஐஸ் போதைப்பொருளுடன் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 430 மில்லிகிராம் மற்றும் 110 மில்லிகிராம் அளவிலான ஐஸ் போதைப்பொருள் அடங்கிய இரண்டு பொதிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 33 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் அக்கரப்பத்தனை மற்றும் டிக்கோயா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
