ஹொரணை பகுதியில் அமைந்துள்ள மக்கள் வங்கிக் கிளையிலிருந்து சுமார் ரூ.35 மில்லியன் (3.5 கோடி ரூபா) நிதி முறைகேடாகப் பெறப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில், வங்கியின் உதவி முகாமையாளரே திட்டமிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பல்வேறு பெண்களிடமிருந்து அதிக வட்டியில் பெற்ற கடன்களுக்கான வட்டித் தொகைகளைச் செலுத்துவதற்காக அவர் வங்கியின் நிதியை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இவ்வாறு பெற்ற பணத்தை இரத்தினக்கல் வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு முதலீடுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த வங்கியின் ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் நிரப்பும் பொறுப்பை அவர் மேற்கொண்டு வந்த நிலையில், வங்கியால் ஒதுக்கப்பட்ட தொகையை விடக் குறைவான பணத்தையே இயந்திரங்களில் செலுத்தி, மீதமுள்ள தொகையை நீண்டகாலமாக தன்னிடமே வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கியில் தொடர்ச்சியான நேரடி நிதி கணக்காய்வுகள் இடம்பெறாத காரணத்தினால், இந்த முறைகேடு நீண்டகாலமாக வெளிச்சத்துக்கு வராமல் இருந்ததாகவும் விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன.
அத்துடன், அவர் பலருக்கு வட்டிக்கு பணம் வழங்கியிருந்ததுடன், தனக்கு நெருக்கமான சில பெண்களுடன் இரவு விடுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பெருமளவில் பணம் செலவழித்திருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், உதவி முகாமையாளரும் பாதுகாப்பு உத்தியோகத்தரும் இணைந்து மிகவும் திட்டமிட்ட வகையில் இந்த போலியான கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டி.டபிள்யூ.சி. தர்மரத்னவின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
